Wednesday, February 12, 2020

ஆஸ்கர் விருதுகள் 2020

Image result for oscars 2020

   92வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில் மிகவும் பிரமாண்டமாகவும் கோலாகலமாகவும் நடைபெற்றது.
Image result for oscars 2020 parasite

பாராசைட்:
    இந்த ஆண்டின் சிறந்த படமாக தென் கொரிய படமான பாராசைட்-டை தேர்வு செய்ததோடு அல்லாமல் மேலும் சிறந்த வெளிநாட்டு படம், சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த இயக்குநர் ஆகிய பிரிவுகளையும் சேர்த்து மொத்தம் 4 விருதுகள் பாராசைட் திரைப்படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. சிறந்த திரைப்படம் என்ற பிரிவில் முதன்முறையாக விருது பெற்ற அயல் மொழி திறைப்படம் என்ற பெருமையையும் இத்திரைப்படம் பெற்றுள்ளது. வாழ்க்கை போரட்டத்தில் தினம் தினம் போராட்டம் நடத்தி வாழ போராடி கொண்டிருக்கும் ஓர் ஏழை குடும்பத்துக்கும், வாழ்வின் அனைத்து சுக போகங்களையும் அனுபவித்து கொண்டிருக்கும் ஓர் பணக்கார குடும்பத்திற்கும் இடையேயான முரண்பாடுகளை எதார்த்தமாக சித்தரிக்கும் காவியமாக படைக்கப்பட்டிருக்கும் திரைப்படமே பாராசட்.

Image result for joker joaquin phoenix


ஜோக்கர்: 
   உலகெங்கிலும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டது போலவே ஜாக்கின் பீனிக்ஸ்க்கு  இந்த ஆண்டின் சிறந்த நடிகருக்கான விருது ஜோக்கர் திரைப்படத்திற்காக வழங்கப்பட்டுள்ளது. மேலும் சிறந்த பின்னனி இசைக்கான விருதும் ஜோக்கர் திரைப்படம் தட்டி சென்றுள்ளது. மக்களை மகிழ்விப்பதற்காகவே ஓர் சாதாரன ஸ்டேண்ட்-அப் காமெடியனாக நினைக்கும் ஒருவனை எவ்வாறு இந்த சமூகம் ஒதுக்கி, அவமானப்படுத்தி அவனை விரக்தியின் உச்சத்திற்கே கொண்டுசென்று வேடிக்கையாக்கி தனக்குள் சிரிக்க வைத்து, கொலைகாரனாக்கி கடைசியில் ஓர் கொள்ளை கூட்டத்திற்கு தலைவனாக்கியது என்பதே ஜோக்கரின் கதைக்களம். ஹீத் லெட்ஜருக்கு அடுத்து இந்த ஜோக்கர் கதாபாத்திரம் வேறொருவருக்கு சரியாக அமையுமா என்ற கேள்வியை சரியாக உணர்ந்து ஜாக்கின் பீனிக்ஸ் இத்திரைப்படத்தில் ஜோக்கராகவே வாழ்ந்திருக்கிறார். அதற்கான பலனாகவே இந்த ஆஸ்கர் என்றால் அது மிகையாகாது.     

Image result for 1917
1917: 
    முதல் உலகப்போர் நடைபெற்ற காலகட்டத்தில் செய்திகளை கொண்டு செல்லும் இரு இளம் வீரர்கள் சார்ந்த 1917 திரைப்படம் சிறந்த கிராஃபிக்ஸ் மற்றும் சிறந்த ஒலிக்கலவைக்கான ஆஸ்கார் விருதுகளை தட்டிச் சென்றுள்ளது. கதைகளத்தை கொண்ட  சிறந்த நடிகைக்கான விருது ஜூடி படத்தில் நடித்த நடிகை ரெனி ஸெல்வெஜருக்கு வழக்கப்பட்டுள்ளது.

Image result for ford v ferrari
ஃபோர்டு VS ஃபெராரி: 
  பிரபல கார் நிறுவனங்களான ஃபோர்ட் மற்றும் ஃபெராரி நிறுவனங்களுக்கிடையே நடைபெற்ற கார் பந்தய போரை அடிப்படையாகக் கொண்டு உருவான திரைப்படமான  ஃபோர்டு VS ஃபெராரி சிறந்த படத்தொகுப்பு மற்றும் சிறந்த ஒலி எடிட்டிங்கிற்கான ஆஸ்கர் விருதுகளை தட்டி சென்றுள்ளது.
Image result for once upon a time in hollywood
ஒன்ஸ் அபான்  டைம் இன் ஹாலிவுட்:
ஹாலிவுட்டின் பொற்காலமாக கருதப்பட்ட 1960களில் நடைபெற்ற கொலை சம்பவங்களை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட ஒன்ஸ் அபான் டைம் இன் ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்ததற்காக பிராட் பிட் அவர்களுக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது வழங்கப்பட்டது மேலும் இத்திரைப்படம் சிறந்த தயாரிப்புகான விருது உட்பட இரண்டு விருதுகளை தட்டி சென்றுள்ளது

Tuesday, July 26, 2016

எனக்கு இன்னைக்கு பொறந்தநாளு ராஜாண்ணா…


கோவை நகரவாசிகளுக்கு பாலனைத் தெரியாமல் இருக்காது.
அவ்வளவு பிரபலம்.
.
உடனே அவர் எம்.எல்.ஏ.வா? மேயரா? கவுன்சிலரா ? என்றெல்லாம் முடியைப் பிய்த்துக் கொள்ள வேண்டியதில்லை.
.
எங்கெங்கெல்லாம் மக்கள் கூட்டம் கூட்டமாக இருக்கிறார்களோ…. அங்கெல்லாம் பாலன் இருப்பான். அதுதான் அவனது அறுவடைக்கான இடங்கள்.
பாலனது தொழிலைப் பற்றி இலக்கிய நயத்தோடு சொல்வதானால் “இரந்துண்டு வாழ்தல்” என்றும் சொல்லலாம். கொச்சையாகச் சொல்வதானால் பிச்சை எடுத்தல் என்றும் சொல்லலாம்.
இத்தனைக்கும் அவன் என் பால்யகாலத் தோழன். எங்கள் வீட்டுக்கு நேர் எதிர்வீடு பாலனுடையது.
சிறுவயதில் அவனோடுதான் குண்டு விளையாடுவேன். விளையாடும்போது யாராவது “கிழவா!” என்று சொல்லிவிட்டால் பாலனுக்குக் கோபம் வந்துவிடும். பெருவிரலை மடக்கி வைத்து விலாப் பகுதியில் குத்துவான்.
.
ஏதோ ஹார்மோன் குறைபாடால் அவனுக்கு சிறுவயதிலேயே வயதுக்கு மீறிய முதிர்ச்சி. பதினைந்து வயதிலேயே முப்பது வயதுத் தோற்றத்தோடு இருப்பான். இத்தனைக்கும் அவன் குடும்பம் வசதியான குடும்பம்.
.
அவன் வீட்டை விட்டு வெளியேறியதற்கு அல்லது வெளியேற்றப்பட்டதற்கு அவனது முகத்தோற்றம் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? யாருக்கும் தெரியாது. காலை தொடங்கி இரவு வரைக்கும் தொடரும் அவனது பிச்சை எடுக்கும் பயணம்.
.
பூமார்கெட் பக்கம் கடை வைத்திருக்கும் ஏதோ ஒரு புண்ணியவான் ஒரு மொட்டை மாடியில் படுத்துக் கொள்ள அடைக்கலம் கொடுத்திருக்கிறார்.
மழை பலமாக அடிக்கும் காலங்களில் பாலன் என்ன செய்கிறானோ என்கிற நினைவாக இருக்கும்.
.
பாலனுக்கு என் இயற்பெயரும் தெரியாது. புனைப்பெயரும் தெரியாது.
ஒன்று சின்ன வயதில் என்னைத் திட்டக் கூப்பிடும் ”டேய் ஜொள்ளு” என்கிற பட்டப்பெயர் தெரியும். அல்லது வீட்டில் அப்பா செல்லமாகக் கூப்பிடும் ”ராஜா” என்கிற பெயர் தெரியும்.
பாமரன்னு சொன்னா யாருடா அது? என்று கேட்பான்.
.
ஊருக்கே உபதேசம் செய்யும். எனக்கு நண்பன் பாலனுக்கு என்ன வழி செய்வது என்பது மட்டும் இன்னமும் புரிபடவில்லை. எத்தனையோ பிரபலங்களைத் தெரிந்து வைத்து என்ன பயன்?
அவனை வீட்டில் கொண்டுபோய் சேர்க்க முடியுமா? அவர்கள் இவனை ஏற்றுக் கொள்வார்களா? அல்லது வேறு ஏதாவது வகையில் உதவ முடியுமா? என்பது எதுவும் இன்றுவரை புரிபடவில்லை எனக்கு.
.
அவனுக்கும் நம்மைப்போல வாழத்தான் ஆசை. ஆனால் அவனது முகத்தோற்றத்துக்கு யாரும் அவனை வேலையில் வைத்துக் கொள்ளத் தயங்குவார்கள்.
.
இந்த உலகில் அவன் போன் செய்யக்கூடிய ஒரே நண்பன் நான் மட்டும்தான். எங்காவது ஒரு ரூபாய் பூத்தில் நின்றுகொண்டு எனக்குப் போன் போடுவான் தினமும்.
.
”யோவ்…. ராஜாண்ணா… எங்கிருக்கற?” என்று.
இன்னைக்கு எவ்வளவுடா வசூலு? என்றால்…
”கம்மிதான்…. எண்பதுதான் கெடச்சுது….” என்பான்.

.
போனவாரம்கூட ”எனக்கு இன்னைக்கு பொறந்தநாளு ராஜாண்ணா…” என்று யாரோ ஒரு நல்ல உள்ளம் எடுத்துக் கொடுத்த பேண்ட்…ஷர்ட்டில் வந்து நின்றான்.
சட்டையின் உள் பாக்கெட்டில் அவன் இன்னும் உயிராய் நேசித்துக் கொண்டிருக்கும் தன் அப்பாவின் படத்தை ஒரு சிறிய நோட்டுப் புத்தகத்துக்குள் பத்திரமாக வைத்திருக்கிறான் பாலன்.
.
“அப்பா என்றழைக்காத உயிரில்லையே” என்பதுதான் அவனைப் பொறுத்தவரை பிடித்தவரிகள். அவனது அந்த அப்பாவும் போய்ச் சேர்ந்து இருபது வருடங்களாகி விட்டது.
.
பாலனை எங்காவது வழியில் பார்த்தால் ”உன் ஃப்ரெண்டு ராஜா… உன்னப் பத்தி எழுதீருக்கிறதப் படிச்சேன்…”ன்னு சொல்லீட்டு அவனுக்கு ஏதாவது வயிராற வாங்கிக் குடுத்துட்டு வாங்க பிரதர்.
.
எனக்கும் பாலனுக்கு அடிப்படையில் ஒரே ஒரு வித்தியாசம்தான்.
அவன் பிச்சை எடுப்பதைக் கொள்கையா வெச்சிருக்கான்.
நானோ கொள்கை பேசி நாசூக்கா பிச்சை எடுக்கிறேன்.
அவ்வளவுதான் வித்தியாசம்.
.
.
("டுபாக்கூர் பக்கங்கள்." குமுதம் வார இதழ் )

Monday, October 26, 2015

தெரிந்து கொள்வோமா!! ஏர்டெல் 4G சந்தி சிரித்த கதையை!!!!


இந்தியாவில் 3G படுதோல்வி! 4G என்பது மெய்யான 4G அல்லஅலைக்கற்றை குறித்த அறிவியல் கட்டுரை!

மொபைல் நாயகன் ஏர்டெல் கடந்த மாதம் (ஆகஸ்ட் 2015) இந்தியாவின் மொபைல் வாடிக்கையாளர்களுக்கு ஒரு சவால் விடுத்தது. ஏர்டெல் 4Gயை விட அதிகமான வேகம் உள்ள எந்த நெட்வொர்க்காவது உண்டா என்று கேட்டதுஅப்படி இருப்பதாக நிரூபித்தால், நிரூபித்தவரின் வாழ்நாள் முழுமைக்குமான மொபைல் செலவுகளை ஏற்கத் தயார் என்றது. ஏர்டெல் சவால் ( AirTel challenge) என்ற புகழ்பெற்ற இந்த விளம்பரத்தை, தொழில்நுட்ப விஷயங்களில் அக்கறை உள்ள வாசகர்கள் அறிந்திருக்கக் கூடும்.

இந்தியாவில் 4G சேவையை நாங்கள்தான் முதன்முதலில் கொண்டு வந்தோம் என்று மார் தட்டுகிறது ஏர்டெல். ஏப்ரல்  2012இல் கொல்கத்தாவில் ஏர்டெல்லின் 4G சேவையை அன்றைய தொலைதொடர்பு அமைச்சர் கபில் சிபல் தொடக்கி வைத்தார்கொல்கத்தாவில் மட்டுமே இந்த சேவை கிடைத்தது.  (Kolkatta is the launch pad of AirTel 4G) தொடர்ந்தும் அடுத்தடுத்தும்  51 நகரங்களுக்கு இந்த சேவை விரிவடைந்தது. (beta launch in 51 towns)

4G உலகில் நுழைந்தது இந்தியா!

தற்போது, 2015 ஆகஸ்ட் 6 முதல் நாடு முழுவதும் 4G சேவையை ஏர்டெல் வழங்குகிறது. பன்னிரண்டு தொலைதொடர்பு  வட்டங்களில் உள்ள 296 நகரங்களில் 4G சேவையை ஏர்டெல் வழங்குகிறது. அதாவது நடப்பாண்டில் (2015ஆம் ஆண்டில்)  மொத்த இந்தியாவும் 4G சேவையைப் பெறுகிறது.

இந்தக் கட்டுரை எழுதப்படும் இந்த நிமிடம் வரை, ஏர்டெல்லைத்  தவிர வேறு எந்த நிறுவனமும் 4G சேவையை வழங்கவில்லை. 2015 டிசம்பரில், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ  மற்றும் ஏர்செல் ஆகிய நிறுவனங்கள் 4G சேவையை வழங்கப்  போவதாக அறிவித்து உள்ளன. BSNL நிறுவனம் எங்கோ  கிடக்கிறது.

மெய்யான 4Gஅல்ல! LTE தொழில்நுட்பம்தான்!

ஏர்டெல் வழங்கும் 4G சேவை மெய்யான 4G தொழில்நுட்பம்  கொண்டதல்ல. இது LTE (LONG TERM EVOLUTION) எனப்படும்  தொழில்நுட்பம் ஆகும். 4G சேவை என்றால், 4G அலைக்கற்றை  (4G Spectrum) வேண்டும் அல்லவா? ஆனால், இந்திய அரசு  இதுவரை 4G அலைக்கற்றையை ஏலம் விடவோ ஒதுக்கீடு  செய்யவோ முன்வரவில்லை என்னும்போது, 4G சேவை  என்று உரிமை கோருவது சரிதானா? .

LTE தொழில்நுட்பம் என்பது இருக்கின்ற 3G அல்லது WiMAX  அலைக்கற்றையை வைத்துக் கொண்டு அதில் தேவையான  மேம்பாடுகளைச் செய்வதன் மூலம் 3Gயை விட அதிகமான  வேகத்தைத் தருவது என்பதுதான். கொல்கத்தாவில் 4G சேவை  வழங்கியதாக உரிமை கோரிய ஏர்டெல் நிறுவனம், சீனாவின்  மொபைல் உற்பத்தி நிறுவனமான ZTE நிறுவனத்துடன் சேர்ந்து  TD-LTE தொழில் நுட்பத்தில் சேவையை வழங்கியது. (TD என்றால்  Time Division என்று பொருள். Time Division, Code Division, Frequency Division  ஆகியவை தொலைதொடர்பின் தொழில்நுட்பங்கள் ஆகும்).

ஏர்டெல் வழங்கும் 4G சேவை மற்றும் பிற நிறுவனங்கள்  வழங்க இருக்கும் 4G சேவை உட்பட, இவை யாவும் LTE  தொழில்நுட்பச் சேவையே அன்றி மெய்யான 4G சேவை அல்ல. LTE என்பது 3Gயை விட மேலான ஆனால் 4Gயை விடக்குறைந்த  சேவை ஆகும். அதாவது 3Gக்கும் 4Gக்கும் இடைப்பட்ட சேவை  ஆகும். (It is a rational number between 3 and 4 but well beyond 3.5)

மெய்யான 4G எது? இதை அறிவிக்கும் அதிகாரம் யாருக்கு?

.நா.வின் சார்பு அமைப்பான (agency) ITU (International  Telecommunications Union) எனப்படும் சர்வதேச தொலைதொடர்புச்  சங்கம் என்ற அமைப்புதான், உலகளவில் 2G, 3G, 4G ஆகிய  தொழில்நுட்பங்களை வரையறுத்து, வகை பிரித்துஅடையாளப்படுத்தி அறிவிக்கும் அதிகாரம் படைத்த ஒரே  அமைப்பாகும். வேறு எவருக்கும் இந்த அதிகாரம் கிடையாதுகபில் சிபல், சுனில் மிட்டல், வினோத் ராய் உள்ளிட்ட எவர்  ஒருவருக்கும் இந்த அதிகாரம் கிடையாது. யார் இந்த  வினோத் ராய்? ஞாபகம் வருகிறதா! பாழாய்ப்போன  முன்னாள் CAG (தலைமைக் கணக்கு அதிகாரி)தான் இவர்!

பொய்யாய்ப்போன ஏர்டெல் விளம்பரம்!

எங்களை விட வேகமான நெட்வொர்க் இருப்பதாக நிரூபித்தால் உங்களின் ஆயுட்காலம் முழுமைக்குமான மொபைல் கட்டணத்தை நாங்களே செலுத்துவோம் என்ற ஏர்டெல் விளம்பரம் இந்தியாவுக்குப் பொருந்தாது. ஏனெனில்இந்தியாவில், இதில் ஏர்டெல்லுடன் போட்டி போட எவரும்  இல்லை. மற்ற எந்த நிறுவனமும் இன்னும் LTE சேவை வழங்கவில்லை. எனவே களத்தில் இருப்பது ஏர்டெல் மட்டும்தான். போட்டியே இல்லாதபோது, சவால் விடுவது எப்படிப் பொருந்தும்?

சர்வதேச அளவில் ஏர்டெல் வழங்கும் LTE சேவையின் வேகம் என்ன என்று பார்ப்போம். ஒப்பன் சிக்னல் (Open Signal) என்ற நிறுவனம் உலக அளவில், 68 நாடுகளில் இயங்கும் 183 LTE நெட்வொர்க்குகளைப் பரிசோதித்து அவற்றின் வேகத்தைக் கண்டறிந்தது.

நடப்பாண்டின் மூன்றாவது கால் பகுதிக்கான (Third quarter of 2015) பரிசோதனை முடிவுகளின்படி, ஏர்டெல் நிறுவனம் பதிவிறக்க வேகத்தைப் பொறுத்து (download speed)147ஆம் இடத்தில் இருக்கிறது. மொத்தம் 183 நெட்வொர்க்களில்ஏர்டெல் 147ஆவது இடம். முதலிடத்தில் நியூசிலாந்து 36 Mbps வேகத்துடனும், இரண்டாம் இடத்தில் சிங்கப்பூர் 33 Mbps வேகத்துடனும் உள்ளன. எனவே, எங்களை விட வேகம் யாருக்காவது உண்டா என்று ஏர்டெல் இந்தியாவில் மட்டும்தான் கேட்க முடியும். உலகத்தை நோக்கிக் கேட்டால் என்ன ஆகும்? அத்தனை பேரின் மொபைல் கட்டணத்தைச் செலுத்த முடியாமல் ஏர்டெல் திவால் ஆகும்!

ஆகஸ்ட் 6, 2015 அன்று இந்தியா 4G தொழில்நுட்பத்தில் நுழைந்து விட்டது. என்றாலும் 127 கோடி மக்களுக்கு இந்தச் செய்தி எட்டியதா? இல்லை. படித்த அறிவாளிப் பகுதியினருக்கே இந்தச் செய்தி இன்னும் போய்ச்சேரவில்லை. ஆங்கில ஏடுகளில்கூட 4G தொழில்நுட்பம் குறித்த கட்டுரைகள் எழுதப்படவில்லை,வணிக நோக்கில் வெளியான கட்டுரைகளைத் தவிர. முகநூல் வாசகர்களுக்காக எழுதப்பட்ட இந்தக் கட்டுரைதான் 4G குறித்த முதல் தமிழ்க் கட்டுரை என்று எங்களால் அடித்துக்கூற இயலும். இந்த நிலையில்தான் அறிவியல் உள்ளது.

மணிக்கணக்கில் விவாதம் நடத்தும் தமிழ் டி.வி சேனல்கள், முக்கியத்துவம் வாய்ந்த இந்த 4G குறித்து விவாதம் நடத்த முன்வருவார்களா
                                                                                                                                           
                                                                                                         -நன்றி - பேஸ்புக்.

Tuesday, January 13, 2015

ஓர் உழவனின் பொங்கல் திருநாள்....


     ஒரு மாதத்துக்கு முன்பே பல பேருடைய மனதில் பொங்கல் பண்டிகைக் குடிகொண்டுவிட்டது. சூரிய வெளிச்சத்தைக் கண்டால் ஓடி மறைபவர்கள், சூரியனைக் கண் டால் தொப்பியையும் கருப்புக் கண்ணாடி யையும் போட்டுக் கொள்பவர்கள், குடை இல்லாமல் வெளியில் செல்ல முடியாத வர்கள், ஒரு நொடி வியர்வைக்கே மின்சார வாரியத்தை தொலைபேசியில் அழைத்து புகார் தெரிவிப்பவர்கள், குளிர் சாதன வசதி இல்லாமல் ஒரு நிமிடத்தைக் கூட தாங்கிக்கொள்ள முடியாதவர்கள் என பொங்கல் பண்டிகைக்காகத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இது தவிர, பரபரப்பாக… வாழ்த் துச் சொல்ல, மகிழ்விக்க, நடிகர் - நடிகைகளைத் தேடி ஓடிக் கொண் டிருக்கும் ஊடகக்காரர்களும், எந்தப் படத்தைப் போடலாம் என காத் திருக்கும் திரைப்படத் துறையினரும், விண்வெளிக் கலத்தை விண்ணில் செலுத்திவிட்டு பதைபதைப்புடன் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு காத்திருக்கும் விண்வெளி ஆராய்ச்சியாளர்களைப் போல், திரைப் படத்தின் வெற்றி - தோல்விக்காகக் காத் திருக்கும் ரசிகர்களும்தான்… பொங்கல் திருநாளுக்காகக் காத்திருக்கிறார்கள்.

பொங்கல் திருநாள் வந்தால் யார் முகத்தில் மகிழ்ச்சி உருவாக வேண் டுமோ... யாரெல்லாம் கொண்டாடி மகிழ வேண்டுமோ… அந்த உழவர்கள் எல்லாம் கடன்காரனுக்கு எந்த பதிலைச் சொல்வது... பொங்கல் செலவுகளை எப்படி சமாளிப்பது... குழந்தை குட்டி களுக்கு துணி எடுக்க யாரிடம் கையேந்துவது என கலங்கிப் போய் நிற்கிறார்கள். ஆனால், மிகச் சிறப்பாக அதாவது ஊடகத்தினர் மொழியில் ‘கோலாகலமாக’ பொங்கலை தமிழ் நாட்டு உழவர்கள் கொண்டாடி மகிழ்ந்த தாக செய்திகள் வெளியாகத்தான் போகிறது, ஊடகங்களில்!

அதேபோல் மழை பெய்தாலும், காய்ந்தாலும் உழவன் கொத்துக் கொத் தாகத் தற்கொலை செய்துகொண்டு செத்தாலும், எப்போதும் போல் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவிக்க, வாழ்த்துச் செய்திகளை அச்சடித்து வைத்துக்கொண்டு அரசியல்வாதிகளும் காத்திருக்கிறார்கள்.

உழவனுடைய நிலை எப்படியிருந்தா லும், உழவர்கள் பெருவாழ்வு வாழ்வதா கச் சொல்லி ஆள்பவர்கள் வாழ்த்துவதில் ஒரு பொருள் இருக்கிறது. எதிர்க்கட்சியும் மற்ற இதரக் கட்சித் தலைவர்களும்கூட சிறிதும் சிந்திக்காமல் அதே போன்ற வாழ்த்துகளைத் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருப்பது எந்த விதத்தில் சரியானது?
கரும்பு வெட்டத் தொடங்கி ஆறு வாரமாகிவிட்டது. கத்தியை வைத்து கரும்பை சாய்த்துவிட்டால், அது உடனே ஆலைக்கு ஏற்றப்பட்டு எடை போட்டுவிட வேண்டும். இல்லையென்றால் தாமதிக் கிற ஒவ்வொரு நொடியும் வெய்யி லில் காய்ந்து எடைகுறைந்து கொண்டே யிருக்கும். வெட்டாமல் விட்டு வைத்திருந் தாலும் முற்றிப்போய், பூ பூத்து, சாற்றை இழந்து கரும்பு தக்கையாகிவிடும். கரும்புக்கான கொள்முதல் விலையை உயர்த்தச் சொல்லி போராட்டங்கள் நாள்தோறும் நடைபெற்றுக்கொண்டே தான் இருக்கின்றன.

நடுவண் அரசு 2012-ம் ஆண்டு அறிவித்த 1,700 ரூபாயிலிருந்து 2,200 ரூபாயாக உயர்த்தி இருக்கிறது. ஆனால் தமிழக அரசு அளித்துவந்த 550 ரூபாயை 450 ரூபாயாக குறைத்து அறிவித்திருக் கிறது. உற்பத்திவிலை கூடிப் போனதால் தங்களின் வேதனையை யாரிடத்தில் சொல்வதென நமக்கெல்லாம் இனிக்கும் சர்க்கரையை தரும் உழவன் கசந்து போய் கிடக்கிறான்.

இதுபோக ஏற்கெனவே தனியார் ஆலை நிறுவனங்கள் இவர்களிடம் வைத் திருக்கிற நிலுவைத் தொகையைக் கொடுக்காததால் அத்தனைப்பேரும் வேதனையில் வெந்து கொண்டிருக் கிறார்கள் .
திரைப்பட நடிகர்கள் உண்ணாவிரதம் எனச் சொல்லி வள்ளுவர் கோட்டத் தின் முன் உட்கார்ந்தால், எல்லா தொலைக்காட்சிகளும் விழுந்தடித்துக் கொண்டு ஓடி வந்து அங்கே வருகின்ற ஒவ்வொருவரின் வாயிலும் ஒரு ஒலிவாங்கியைக் கொடுத்து நேரலை ஒளிபரப்பைச் செய்கின்றன.

ஆனால், உழவருடைய போராட் டத்தை ஒரு போராட்டமாகவே எவருமே பார்ப்பதில்லை. சென்ற மாதம் டெல்லி வரைக்கும் சென்று நாடாளுமன்றத்தின் முன் இந்தக் கடுங்குளிர் பருவத்திலும் வேட்டி - சட்டையுடன் கிடந்து கத்திப் பார்த்தார்கள். ‘இவர்கள்’ செத்துத் தொலைந்தால்… தங்கள் கட்சிக்குத் தான் இழுக்கு என நினைத்த அமைச் சர்கள், பழச்சாறு கொடுத்து படம் எடுத்துக்கொண்டு அனுப்பி வைத்து விட்டார்கள்.

எந்தப் பொருளை யார் உருவாக்கி னாலும், அதற்கான விலையை அவன் குறித்துக்கொள்ள முடியும். உழவ னுக்கு மட்டும்தான் அந்த உரிமை இல்லை. வணிகர்கள் கேட்கிற விலைக் குக் கொடுத்துவிட்டு எப்போது பணம் கொடுப்பார்கள் என காத்திருக்க வேண் டும். பல நேரங்களில் விலையில்லை எனச் சொல்லி திருப்பி அனுப்பி விடுவதால், வீதியில் கொட்டிவிட்டு வீடு வந்து சேர்கிறான். அப்போதுகூட உழவனின் நிலையைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல், ஓடிப் போய் போட்டிப் போட்டு அள்ளிக் கொள்பவர்களும் நம் மதிப்புக்குரிய மக்கள்தான்.

வேலை செய்கிற நாட்களுக்கும், விடுமுறை நாட்கள் எனச் சொல்லி வேலை செய்யாத நாட்களுக்கும் சேர்த்து ஊதிய மும்; அதுபோக, ஊக்கத் தொகை என அனைத்தையும் பெற்றுக்கொள்கிற பல்வேறு அலுவலக ஊழியர்களுக்கும் பொங்கல் திருநாள்தான். தலைமுறைத் தலைமுறையாக கடனி லேயே உழன்று, வறுமையிலேயே செத்து மடிகிற உழவனுக்கும் பொங்கல் தான். அனைவருடைய வயிற்றுக்கும் உணவளித்துவிட்டு யார் கையையும் எதிர்பார்த்து வாழாத உழவன், அரசாங் கம் கொடுத்த 100 ரூபாயை வாங்குவதற் காக வெய்யிலில் வரிசையில் காத்துக் கிடந்த காட்சிகளையும் கண்டுகொண்டு தான் இருந்தோம்.

உழவனின் குரல் ஓங்கி ஒலித்த காலங்களும் உண்டு. இறுதிவரைப் போராட்டத்தை ஒடுக்க முடியாமல், வேறு வழியில்லாமல் உழவர் சங்கத் தலைவரை சந்திக்க, புதுடெல்லியில் இருந்து அப்போது தலைமை அமைச்ச ராக இருந்த இந்திரா காந்தியும், சென்னையில் இருந்து முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரனும் அவருடைய கிராமத்துக்கேச் சென்று பேசித் தீர்த்ததெல்லாம் அன்று நடந்தன.

யார் ஆட்சிக்கு வந்தாலும் அவன் குறை தீர்ந்தபாடில்லை. அவனது சிக்க லின் அடிவேரை ஆராய்ந்து பார்க்கத் தெரியாததாலும், விரும்பாததாலும் வெறும் இலவசங்களையும், மானியங் களையும் கொடுத்து தப்பித்துக் கொள்கிறார்கள்.
உழவனின் மரபுக் குடிகளெல்லாம் உடம்பில் தீப்பிடித்துக் கொண்டதுபோல் தன் கிராமத்தை விட்டும், தன் நிலத்தை விட்டும் வெளியூருக்கும், வெளி நாட்டுக் கும் ஓடிவிட்டன. மீதமுள்ளவர்களும் ஓடிப் போக நெடுங்காலமாகாது. அப் போது இன்று கொண்டாடுவதுபோல் உழவனின் பெயரைச் சொல்லி பொங் கல் திருநாளைக் கொண்டாட முடியாது.
ஏற்கெனவே உழவன் இல்லாத பொங்கலும், கால்நடைகள் இல்லாத மாட்டுப் பொங்கலும் நம்மவர்களால் உருவாக்கப்பட்டுவிட்டன. ‘இல்லை… நாங்கள் பொங்கல் கொண்டாடியே தீருவோம். உழவன் அழிந்தால் எங்களுக்கென்ன? நாங்கள் தமிழர்கள்’ எனச் சொல்லி கொண்டாடலாம். அப்படி யானால் தமிழர்களாக இருக்கின்ற கிறித்துவர்களும், இசுலாமியர்களும் பொங்கலைக் கொண்டாட வேண்டு மல்லவா? அவர்களும் இந்த உழவுத் தொழிலை செய்கிறவர்களும், செய்த வர்களும்தானே. இதை ஒரு மதம் சார்ந்த பண்டிகையாக மாற்றியவர்கள் யார்? உணவளிக்கும் சூரியனுக்கு நன்றி சொல்லும் நாள் என்றால் அப்படி ஒன்றை நாம் எல்லோரும் கொண்டாடுவதுதானே சரி?
உலகத்தில் எந்த மொழியிலாவது ‘ஓர் அரசாங்கம் என்பது இப்படித்தான் இருக்க வேண்டும்’ எனச் சொல்லியிருப் பார்களா?
‘வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயரக் குடி உயரும்
குடி உயரக் கோல் உயரும்
கோல் உயரக் கோன் உயரும்!’
- என ஒளவை பாடியது போல நடந்தால் அப்போதுதான் அது அரசாட்சியாக இருக்கும். ஆனால், இங்கே எதெல்லாம் உயர்ந்துகொண்டு இருக்கிறது என்பதை பார்த்துக்கொண்டு தானே இருக்கிறோம்.
திருக்குறளையும், திருவள்ளுவன் புகழையும் பரப்பி அவனுக்கு சிலை வைத்துவிட்டால் தமிழன் வாழ்ந்துவிடு வான் என நினைப்பவர்களுக்கு, ஒளவையின் இந்தப் பாடலை நினைவு படுத்த விரும்புகிறேன். வள்ளுவனை ஒருவேளை ஆட்சி யாளர்கள் மதித்தால் (நடுவண் அரசையும் சேர்த்துதான்) வள்ளுவன் பாடியிருக்கிற ஒரு குறளின்படியாவது உழவுத் தொழிலை முன்னேற்றும் காரியத்தை முதலில் செய்து காட்டுங்கள்.
- இன்னும் சொல்லத்தோணுது…
எண்ணங்களைத் தெரிவிக்க: thankartamil@gmail.com