Tuesday, July 26, 2016

எனக்கு இன்னைக்கு பொறந்தநாளு ராஜாண்ணா…


கோவை நகரவாசிகளுக்கு பாலனைத் தெரியாமல் இருக்காது.
அவ்வளவு பிரபலம்.
.
உடனே அவர் எம்.எல்.ஏ.வா? மேயரா? கவுன்சிலரா ? என்றெல்லாம் முடியைப் பிய்த்துக் கொள்ள வேண்டியதில்லை.
.
எங்கெங்கெல்லாம் மக்கள் கூட்டம் கூட்டமாக இருக்கிறார்களோ…. அங்கெல்லாம் பாலன் இருப்பான். அதுதான் அவனது அறுவடைக்கான இடங்கள்.
பாலனது தொழிலைப் பற்றி இலக்கிய நயத்தோடு சொல்வதானால் “இரந்துண்டு வாழ்தல்” என்றும் சொல்லலாம். கொச்சையாகச் சொல்வதானால் பிச்சை எடுத்தல் என்றும் சொல்லலாம்.
இத்தனைக்கும் அவன் என் பால்யகாலத் தோழன். எங்கள் வீட்டுக்கு நேர் எதிர்வீடு பாலனுடையது.
சிறுவயதில் அவனோடுதான் குண்டு விளையாடுவேன். விளையாடும்போது யாராவது “கிழவா!” என்று சொல்லிவிட்டால் பாலனுக்குக் கோபம் வந்துவிடும். பெருவிரலை மடக்கி வைத்து விலாப் பகுதியில் குத்துவான்.
.
ஏதோ ஹார்மோன் குறைபாடால் அவனுக்கு சிறுவயதிலேயே வயதுக்கு மீறிய முதிர்ச்சி. பதினைந்து வயதிலேயே முப்பது வயதுத் தோற்றத்தோடு இருப்பான். இத்தனைக்கும் அவன் குடும்பம் வசதியான குடும்பம்.
.
அவன் வீட்டை விட்டு வெளியேறியதற்கு அல்லது வெளியேற்றப்பட்டதற்கு அவனது முகத்தோற்றம் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? யாருக்கும் தெரியாது. காலை தொடங்கி இரவு வரைக்கும் தொடரும் அவனது பிச்சை எடுக்கும் பயணம்.
.
பூமார்கெட் பக்கம் கடை வைத்திருக்கும் ஏதோ ஒரு புண்ணியவான் ஒரு மொட்டை மாடியில் படுத்துக் கொள்ள அடைக்கலம் கொடுத்திருக்கிறார்.
மழை பலமாக அடிக்கும் காலங்களில் பாலன் என்ன செய்கிறானோ என்கிற நினைவாக இருக்கும்.
.
பாலனுக்கு என் இயற்பெயரும் தெரியாது. புனைப்பெயரும் தெரியாது.
ஒன்று சின்ன வயதில் என்னைத் திட்டக் கூப்பிடும் ”டேய் ஜொள்ளு” என்கிற பட்டப்பெயர் தெரியும். அல்லது வீட்டில் அப்பா செல்லமாகக் கூப்பிடும் ”ராஜா” என்கிற பெயர் தெரியும்.
பாமரன்னு சொன்னா யாருடா அது? என்று கேட்பான்.
.
ஊருக்கே உபதேசம் செய்யும். எனக்கு நண்பன் பாலனுக்கு என்ன வழி செய்வது என்பது மட்டும் இன்னமும் புரிபடவில்லை. எத்தனையோ பிரபலங்களைத் தெரிந்து வைத்து என்ன பயன்?
அவனை வீட்டில் கொண்டுபோய் சேர்க்க முடியுமா? அவர்கள் இவனை ஏற்றுக் கொள்வார்களா? அல்லது வேறு ஏதாவது வகையில் உதவ முடியுமா? என்பது எதுவும் இன்றுவரை புரிபடவில்லை எனக்கு.
.
அவனுக்கும் நம்மைப்போல வாழத்தான் ஆசை. ஆனால் அவனது முகத்தோற்றத்துக்கு யாரும் அவனை வேலையில் வைத்துக் கொள்ளத் தயங்குவார்கள்.
.
இந்த உலகில் அவன் போன் செய்யக்கூடிய ஒரே நண்பன் நான் மட்டும்தான். எங்காவது ஒரு ரூபாய் பூத்தில் நின்றுகொண்டு எனக்குப் போன் போடுவான் தினமும்.
.
”யோவ்…. ராஜாண்ணா… எங்கிருக்கற?” என்று.
இன்னைக்கு எவ்வளவுடா வசூலு? என்றால்…
”கம்மிதான்…. எண்பதுதான் கெடச்சுது….” என்பான்.

.
போனவாரம்கூட ”எனக்கு இன்னைக்கு பொறந்தநாளு ராஜாண்ணா…” என்று யாரோ ஒரு நல்ல உள்ளம் எடுத்துக் கொடுத்த பேண்ட்…ஷர்ட்டில் வந்து நின்றான்.
சட்டையின் உள் பாக்கெட்டில் அவன் இன்னும் உயிராய் நேசித்துக் கொண்டிருக்கும் தன் அப்பாவின் படத்தை ஒரு சிறிய நோட்டுப் புத்தகத்துக்குள் பத்திரமாக வைத்திருக்கிறான் பாலன்.
.
“அப்பா என்றழைக்காத உயிரில்லையே” என்பதுதான் அவனைப் பொறுத்தவரை பிடித்தவரிகள். அவனது அந்த அப்பாவும் போய்ச் சேர்ந்து இருபது வருடங்களாகி விட்டது.
.
பாலனை எங்காவது வழியில் பார்த்தால் ”உன் ஃப்ரெண்டு ராஜா… உன்னப் பத்தி எழுதீருக்கிறதப் படிச்சேன்…”ன்னு சொல்லீட்டு அவனுக்கு ஏதாவது வயிராற வாங்கிக் குடுத்துட்டு வாங்க பிரதர்.
.
எனக்கும் பாலனுக்கு அடிப்படையில் ஒரே ஒரு வித்தியாசம்தான்.
அவன் பிச்சை எடுப்பதைக் கொள்கையா வெச்சிருக்கான்.
நானோ கொள்கை பேசி நாசூக்கா பிச்சை எடுக்கிறேன்.
அவ்வளவுதான் வித்தியாசம்.
.
.
("டுபாக்கூர் பக்கங்கள்." குமுதம் வார இதழ் )

No comments:

Post a Comment